உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள சூழ்நிலையில் தமிழகத்தில் நோய் தடுப்பு நடவடிக்கையாக அரசு கபசுர நீரை அருந்த அறிவுரை வழங்கியுள்ளது.
கபசுரக் குடிநீர் சுக்கு, மிளகு, திப்பிலி உள்ளிட்ட 15 பொருட்கள் சேர்த்து இயற்கை முறையில் தயாரிக்கப் படுவதால், பக்கவிளைவுகள் இல்லாததால் இதனை ஏராளமானோர் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் சென்னை பாரிமுனை ராசப்பா தெருவில் செயல்பட்டு வரும் நாட்டு மருந்து கடைகளில் தயாரிக்கப்படும் கபசுர குடிநீர் தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பெருமளவு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அங்கு கோரோனோ அச்சம் காரணமாக அங்கு நாளொன்றுக்கு 5 ஆயிரம் பாக்கெட்டுகள் வரை விற்பனை நடைபெறுவதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 100 கிராம் வாங்கிய சிறிய வியாபாரிகள் தற்போது 5 கிலோ வரை கேட்பதாக தெரிவித்துள்ள அவர்கள் நாட்டு மருந்துகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்துள்ளதாகவும் எனவே அனைத்து காலங்களிலும் நாட்டு மருந்து கடைக்கு அரசு உதவிட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே சென்னையில் கொரோனா பரவத் தொடங்கிய போது கபசுர குடிநீர் விற்பனை குறைவாக இருந்ததாக தெரிவித்துள்ள, வேளச்சேரியை சேர்ந்த சிறு வியாபாரி, கொரோனா நோய் தொற்று அதிகரிப்பு காரணமாக தற்போது நாளொன்றுக்கு 3000 பேர்வரை கபசுர குடிநீர் வாங்குவதாக தெரிவிக்கின்றார்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் உடல் நலனை காக்கும் இந்த கபசுர குடிநீர், மீண்டும் நமது பாரம்பரிய மருத்துவத்திற்கு அழைத்துச் செல்வது ஆரோக்கியமான சமுதாயத்திற்கு வழிவகுக்கும் என்பது நிதர்சனமான உண்மையாகும்.