நீதிபதி கண்முன்னே வாலிபர்களை வெட்டிக் கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அருகில் மாதவரம் பால்பண்ணை சின்ன மாத்தூர் கருமாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர்கள் 22 வயதுடைய யுவராஜ், 27 வயதுடைய மகேஷ், 25 வயதுடைய லோகநாதன். இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள மதுபான கடையில் மது குடித்துக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட பிரச்சனையில் மாத்தூர் எம். எம். டி. ஏ பகுதி வசித்துவந்த 25 வயதுடைய விக்னேஸ்வரன், 26 வயதுடைய சந்தோஷ்குமார் ஆகிய 2 பேரையும் வெட்டினார்கள்.இதில் பலத்த காயம் அடைந்த அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
இதுதொடர்பாக மாதவரம் பால்பண்ணை இன்ஸ்பெக்டர் சங்கர் குற்றவாளிகளான யுவராஜ், மகேஷ், லோகநாதன் ஆகியோரை கைது செய்து நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வந்துள்ளார். அப்போது நீதிமன்ற வளாகத்தில் அரிவாளுடன் பதுங்கி இருந்த விக்னேஸ்வரன், சந்தோஷ் குமார் நண்பரான மற்றொரு சந்தோஷ்குமார்(27) என்பவர் நீதிபதி முன்னிலையில் அவர்கள் 3 பேரையும் அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார்.
இதை பார்த்த அங்கு காவலில் இருந்த காவல்துறையினர் ஓடிச்சென்று சந்தோஷ் குமாரை மடக்கிப் பிடிக்க முயன்றபோது அவர் தப்பித்து சென்று விட்டார். இது குறித்து இன்ஸ்பெக்டர் காளிராஜ் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொடுங்கையூரை சேர்ந்த சந்தோஷ் குமாரை வலைவீசி தேடி வருகின்றார். இந்த சம்பவம் கோர்ட்டில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .