அமெரிக்காவில் 2 படகுகள் நேருக்கு நேர் மோதி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்கா நாட்டில் ராணுவத்தில் பணியாற்றி உயிர் நீத்த வீரர்களை கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் கடைசி திங்கட்கிழமை அன்று ராணுவ வீரர்களின் நினைவு நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் அமெரிக்கா முழுவதும் அரசு விடுமுறை அளிக்கப்படும். மேலும் நினைவு நாளுக்கு முந்தைய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வழக்கமான வார விடுமுறை நாட்களாகும். எனவே இந்த 3 நாள் தொடர் விடுமுறையை அமெரிக்காவில் பொதுமக்கள் பூங்கா, ஏரி மற்றும் கடற்கரை போன்ற இடங்களுக்கு சென்று கொண்டாடுவார்கள்.
இந்த வகையில் ஜார்ஜியா மாகாணத்தை சேர்ந்த பொதுமக்கள் அங்குள்ள வில்மிங்டன் ஆற்றில் படகு சவாரி செய்து விடுமுறையை உற்சாகமாக கழித்தது வழக்கம். இங்கு மக்கள் குடும்பத்தினருடனும் , நண்பர்களுடனும் கூட்டம் கூட்டமாக படகுகளில் சவாரி செய்திருந்தார்கள். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக எதிர் எதிர் திசையில் பயணம் செய்த 2 படகுகள் திடீரென நேருக்கு நேர் மோதியது. இதில் 2 படகுகளும் ஆற்றில் கவிழ்ந்து மூழ்கியது. இந்த 2 படகுகளிலும் பயணம் செய்த 9 பேரும் நீரில் மூழ்கியுள்ளனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அமெரிக்க கடலோர காவல்படையினர் மீட்பு படகுகளில் சம்பவ இடத்துக்கு மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர். ஹெலிகாப்டரை பயன்படுத்தியும் மீட்பு பணிகள் நடத்தினர். இந்த கோர விபத்தில் 5 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பல மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு 4 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் மருத்துவமனையல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதே மாதிரி இல்லினாய்ஸ் மாகாணத்தின் செனிகா நகரில் பயணிகளை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று புறப்பட்டது. அப்போது சற்றும் எதிர்பாராத விதத்தில் படகின் என்ஜின் வெடித்து சிதறியது. இதனால் படகு தீப்பற்றியது. இதனைத் தொடர்ந்து படகு முற்றிலுமாக எரிந்து ஆற்றில் மூழ்கியது. மேலும் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் இல்லை என்றும் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை மீட்புப் பணியினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.