லாரி மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகில் திவான்சாபுதூர் கல்யாண மண்டபம் வீதியில் வசித்து வந்தவர் ஓய்வுபெற்ற ரயில்வே துறை ஊழியர் சண்முகம் (70). இவர் தனது பைக்கில் கோவை அருகில் சூலூர் கல்பாவிஹார் இந்திய விமானப்படை குடியிருப்பு பகுதியில் வசிக்கும் தனது மகன் 42 வயதுடைய மணி என்பவர் கட்டி வருகின்ற புது வீட்டை பார்ப்பதற்காக சென்றார். அப்போது அந்த பைக்கின் முன்பக்கம் தேங்காய் மூட்டையை வைத்துக்கொண்டு நான்கு வழி சாலையில் செல்லும் போது பின்னால் வந்த சமையல் கியாஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி ஒன்று சண்முகம் பைக் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சண்முகம் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான சண்முகம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் லாரியை ஓட்டிவந்த கிணத்துக்கடவு அருகில் குருநல்லி பாளையத்தில் வசித்த ராமசாமி என்பவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.