மதுரை மாவட்டம் மேலூர் அருகில் உள்ள சூரக்குண்டு தெற்குவளவு தெருவில் காளிகருப்பன் கோவில் உள்ளது. இந்தக்கோவிலில் களரி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருவிழா மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், நோய் நொடி இன்றி மக்கள் நல்லபடியாக வாழ வேண்டி பல நூறு ஆண்டுகளாக பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. இந்த விழா 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆடி மாதத்தில் காவல் தெய்வங்களையும், தங்களது முன்னோர்களையும் வேண்டி ஒரே வாரிசுகளாக இருக்கக்கூடிய தெற்குவளவு 560 குடும்பங்களை சேர்ந்த பங்காளிகள் காளிகருப்பன் கோவிலில் களரி திருவிழாவை பாரம்பரிய முறைப்படி கொண்டாடி வருகின்றன.
இந்த குடும்பங்களை சேர்ந்தவர்கள் எங்கு இருந்தாலும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் இந்த திருவிழாவிற்கு கட்டாயம் குடும்பத்துடன் பங்கேற்பது வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த ஆண்டு விழாவுக்காக ஊருக்கு தெற்கு 2 கி.மீ. தொலைவில் உள்ள தீர்த்த குளத்தில் ஒவ்வொரு குடும்பத்தினரும் பல்வேறு நேர்த்திக்கடன்களை வைத்து 500க்கும் மேற்பட்ட மண்பானைகளில் தீர்த்தம் எடுத்து அங்கிருந்து ஊர்வலமாக வந்து பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்தனர். இதனையடுத்து முன்னோர்கள் காலத்தில் சகோதரர்களுடன் ஒற்றுமையாக வாழ்ந்து வந்ததை மறவாமல் அந்த 560 குடும்ப வாரிசுகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒற்றுமையாக விழாவை கொண்டாடி வருகின்றனர். மேலும் நேர்த்திக்கடனுக்காக நான் இருக்கும் மேற்பட்ட ஆட்டு கிடாய்களை படையலிட்டு தங்களது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் விருந்து அளித்தனர்.