பொங்கல் தினத்தை முன்னிட்டு நடைபெறும் மாடுகளுக்கு பூ தாண்டும் விழா இந்த ஆண்டும் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.
நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள ஊனாங்கல்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாடுகளுக்கு பூ தாண்டும் விழா நடத்துவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் ஊனாங்கல்பட்டி வீரகாரன் கோவில் முன்பு பூ தாண்டும் போட்டி நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் ஊனாங்கல்பட்டி, குன்னத்தூர், சின்னபெத்தாம்பட்டி, மேலப்பட்டி, மல்லுமாச்சம்பட்டி ஆகிய ஊர்களை சேர்ந்த 5 கோவில் மாடுகள் இதில் பங்கேற்றுள்ளது.
இந்நிலையில் அந்தந்த பகுதியை சேர்ந்த மாடுகளை ஊர் பொதுமக்கள் மேளதாளங்களுடன் அழைத்து செல்வார்கள். இதனையடுத்து கோவில் மாடுகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்திய பின்பு பூ தாண்டும் விழா நடைபெற்றுள்ளது. இதற்காக வீரகாரன் கோவில் முன்பு மஞ்சள் போடி, ஆவாரம்பூ, பூக்கள், கரும்பு, வெற்றிலை மற்றும் பாக்குகளை கொண்டு எல்லைகோடு அமைக்கப்பட்டது.
மேலும் இதில் பங்கேற்ற மாடுகள் 3 முறை எல்லைகோட்டை தாண்ட வேண்டும். அப்போது வேகமாக எல்லைகோட்டை தாண்டிய தாண்டிய சின்னபெத்தாம்பட்டி கோவில் மாடு வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளனர். இதனையடுத்து ஊர் மக்கள் வெற்றி பெற்ற மாடை மேளதாளங்களுடன் அழைத்து சென்றுள்ளனர். இதனை காண்பதற்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.