Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கோலாகலமான பங்குனி உத்திர திருவிழா… கொடியேற்றத்துடன் தொடக்கம்… பக்தர்கள் சிறப்பு வழிபாடு..!!

பெரம்பலூரில் மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பெரம்பலூரில் சிறப்பு வாய்ந்த மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கொரோனா தொற்று காரணமாக பங்குனி உத்திர திருவிழாவிற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் மாவட்ட நிர்வாகம் பக்தர்களின் வேண்டுகோளை கருத்தில் கொண்டு அந்த கோவிலில் திருவிழாவை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. இதனால் இரண்டு நாட்கள் தாமதமாக பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த கொடியேற்றத்தை முன்னிட்டு உற்சவ மூர்த்திகள் மற்றும் மூலவருக்கு மகா தீபாராதனையும், சிறப்பு திருமஞ்சனமும் பிராமணர் சங்கம் சார்பில் நடைபெற்றது.

அதன்பின் பல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மதனகோபாலசுவாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு எழுந்தருளினார். இந்த பல்லக்கு கொடிமரத்தின் முன்பு வந்து நின்ற போது கொடி ஏற்றப்பட்டது. கோவில் பட்டாச்சாரியார் குழுவினர், அர்ச்சகர் பட்டாபிராமன் தலைமையில் கொடியேற்ற உற்சவத்தை நடத்தினர். இந்த விழாவில் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் சீனிவாசமூர்த்தி, சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் அய்யர், பொருளாளர் சஞ்சீவிராவ் மற்றும் பக்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். கொடியேற்றத்தை தொடர்ந்து மதியம் சிம்ம வாகனத்திலும், காலையில் ஹம்ச வாகனத்தில் பிரகாரத்தை சுற்றி உலா நடைபெற்றது.

இதையடுத்து அனுமந்த வாகனத்தில் வீதி உலா இரவில் நடைபெற்றது. பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு பல்லக்கில் சேஷ வாகனத்தில் இன்று புறப்பாடும், வெள்ளி கருட சேவை மற்றும் உதய கருட வாகனங்களில் நாளை சுவாமி புறப்பாடும், யானை வாகனத்தில் 25-ஆம் தேதி சுவாமி புறப்பாடும், 26-ஆம் தேதி மாலையில் திருக்கல்யாணமும், புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா 26-ஆம் தேதி இரவும், வெண்ணெய்த்தாழி உற்சவம் 27-ஆம் தேதியும், குதிரை வாகனத்தில் திருவீதி உலா 27-ஆம் தேதி அன்று இரவும், தேரோட்டம் 28-ஆம் தேதியும், துவாதச ஆராதனம் 29-ஆம் தேதி அன்று காலையிலும், அதன்பின் இரவு ஸப்தாவரணம் நிகழ்ச்சியும், ஸ்நபன திருமஞ்சனம் 30-ஆம் தேதி காலையிலும் நடைபெற உள்ளது.

இதையடுத்து புன்னைமர வாகனத்தில் திருவீதி உலா 30-ஆம் தேதி அன்று இரவும், மட்டையடி 31-ஆம் தேதி காலையிலும், ஊஞ்சல் உற்சவம் 31-ஆம் தேதி அன்று இரவும், மஞ்சள் நீர் ஏப்ரல் 1-ஆம் தேதி காலையும், விடையாற்றி விழா 1-ஆம் தேதி அன்று இரவும், திருத்தேர் 4-ஆம் தேதியும், திருவிழா 8-ஆம் தேதியும் நடைபெறவிருக்கிறது. 8-ஆம் தேதி அன்று காலையில் பெருமாள் திருமஞ்சனமும், பெருமாள் ஏகாந்த சேவை சுவாமி புறப்பாடு 8-ஆம் தேதியன்று இரவும் நடைபெறுகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அரியலூர் உதவி ஆணையர், கோவில் தக்கார், திருக்கோவில் பணியாளர்கள், கோவில் செயல் அலுவலர் அனிதா, கட்டளைதாரர்கள் செய்து வருகின்றனர்.

Categories

Tech |