பிரேசில் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோழி இறைச்சியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் உள்ள உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதும் பரவியுள்ளது.அதனால் அனைவரும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், சீனாவில் ஷென்ஷென் நகரில், பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோழி இறைச்சியின் மேற்பரப்பில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியை பரிசோதனை செய்ததில், அதில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியது.அந்த கோழி இறைச்சி, பிரேசில் நாட்டின் தென் மாகாணமான அரோரா அலிமென்டோசில் உள்ள ஆலையில் இருந்து வந்ததுள்ளது. அதனால் ஷென்ஷென் நகர மக்கள், இறக்குமதி செய்த பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்கும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என உள்ளூர் அரசு நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அரசு தரப்பில் கூறும் போது, “இறக்குமதி செய்த பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் நீர்வாழ் பொருட்களை வாங்கும்போது நுகர்வோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளது.இருந்தாலும் அந்த கோழி இறைச்சியுடன் தொடர்பில் இருந்த நபர்களையும், தொடர்புடைய பிற தயாரிப்புகளையும் பரிசோதனைக்கு உட்படுத்தியதில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது. சீனாவின் பிற நகரங்களில் இறக்குமதி செய்த பதப்படுத்தப்பட்ட கடல் உணவுகளின் ‘பேக்கேஜ்’ மேற்பரப்பை பரிசோதித்ததில் கொரோனா வைரஸ் தொற்று இருந்ததாக ஏற்கனவே தகவல்வெளியாகியது.
சீனாவின் ஷான்டோங் மாகாணத்தின் வடக்கு நகரமான யெண்டாயில் இறக்குமதி செய்த பதப்படுத்தப்பட்ட கடல் உணவு பொருட்களின் 3 ‘பேக்கேஜ்’ மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவற்றில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி இருப்பதாக அந்த நகர நிர்வாகம் கூறியுள்ளது. அதை சமூக ஊடகமான வெய்போவில் யெண்டாய் நகர அரசு நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதே போன்று ஈக்குவடார் நாட்டில் இருந்து இறக்குமதி செய்த இறால் ‘பேக்கேஜ்’ மாதிரியை உஹூ நகரில் சோதித்ததில் அதிலும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தும் சீன நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.