தூத்துக்குடி அருகேயுள்ள தருவைகுளம் மேல மருதூர் பகுதியிலுள்ள முனியசாமி கோயிலில் சென்ற 15ஆம் தேதி 11 பித்தளை மணிகள் திருட்டுபோனது. இது தொடர்பாக கோயில் தர்மகர்த்தா மேல மருதூர் கிழக்கு தெருவை சேர்ந்த மேகலிங்கம் மகன் கருப்பசாமி (59) என்பவர் தருவைகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் மேல மருதூர் புளியமரத்து தெருவை சேர்ந்த முனியசாமி மகன் முருகானந்தம் என்ற மூக்காண்டி (28) என்பவர் கோயிலில் பித்தளை மணிகளை திருடியது தெரியவந்தது. அதனை தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், கோயில் மணிகளை திருடியதாக முருகானந்தம் என்ற மூக்காண்டியை கைது செய்தார். அத்துடன் அவரிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 9 ஆயிரம் மதிப்புள்ள 11 பித்தளை மணிகளையும் பறிமுதல் செய்தார்.