திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாண்டிக்குடியில் முத்தாலம்மன், பட்டாளம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் திருவிழாவில் பக்தர்கள் வினோத வழிபாடு நடத்துவார்கள். அதன்படி பண்ணைக்காடு, கானல்காடு, காவனூர், கோடங்காடு உள்ளிட்ட மலை கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் 3 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த தாண்டிக்குடி முத்தாலம்மன், பட்டாளம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆண்கள் மட்டும் சேத்தாண்டி வேடம் அணிந்து ஊர்வலமாக வந்து ஒருவருக்கொருவர் உடலில் சேற்றை வாரி பூசிக்கொண்டு கோவிலுக்கு சென்றனர். இதனையடுத்து முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினர். இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது, மலை கிராம மக்கள் நோயின்றி வாழவும், விவசாயம் செழிக்கவும் சேற்றை வாரி பூசி வழிபாடு நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர்.