சாமி சிலைகள் வைக்கப்படும் இடத்திற்கு நாகப்பாம்பு வந்ததை பார்த்து பக்தர்கள் பரவசமடைந்தனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள ரங்கசமுத்திரம் பகுதியில் கன்னிமார் கருப்பணசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் முடிவு செய்தனர். இதற்காக கோவிலில் திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கோவிலில் தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்த போது நாகப்பாம்பு ஒன்று ஊர்ந்து வந்துள்ளது. இதனை பார்த்ததும் தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். அந்த நாகப்பாம்பு 7 கன்னிமார் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்காக வரையப்பட்டிருந்த கட்டங்களில் ஏறி நின்று பார்த்துள்ளது.
இதனை பார்த்ததும் பரவசமடைந்த பக்தர்கள் நாகாத்தம்மா என்று கோஷம் எழுப்பி வணங்கியுள்ளனர். இது குறித்து அறிந்த பொதுமக்கள் கோவிலில் திரண்டு நாக பாம்பை செல்போனில் படம் பிடித்தனர். சிறிது நேரத்தில் பாம்பு அருகிலிருந்த தோட்டத்திற்குள் சென்றுவிட்டது. இது குறித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.