சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கோவிலுக்கு சென்று கொண்டிருந்த கார் திடீரென விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை முல்லை நகர் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்தார். ராமநாதபுரம் சாயல்குடி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (65), தத்தனேரி பகுதியை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவரது மனைவி அல்லிராணி (45). இவர்கள் 3 பேர் உட்பட 11 பேர் திருவெற்றியூரில் உள்ள பாகம்பிரியாள் கோவிலுக்கு நேற்று காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. அதன்பின் சாலையோரத்தில் கவிழ்ந்தது. அதில் காரில் இருந்தவர்கள் கூச்சலிட்டனர். அதனை கண்டு அங்கு வந்த அப்பகுதி மக்கள் காரினுள் சிக்கி தவித்தவர்களை மீட்டனர்.
இந்த விபத்தில் ஆறுமுகம், அல்லிராணி ஆகிய இருவரும் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த விபத்தில் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த ராஜாவை அப்பகுதி மக்கள் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்துவிட்டார். இதையடுத்து காயமடைந்த மற்ற 8 பேரும் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து காளையார்கோவில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.