கோவிலுக்கு நடைபயணம் மேற்கொண்ட பெண் பக்தர் ஒருவரின் தலைமுடி ஜெனரேட்டர் காத்தாடியில் சிக்கி உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திட்டக்குடி தாலுகாவிலுள்ள குதிரைசந்தை என்ற கிராமத்தில் வீரன்( 28) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி திவ்யா, முத்தரசன்(4), கனிமொழி(2) என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக திவ்யா தனது பெற்றோரின் வேண்டுதலுக்கிணங்க மாலை அணிந்து மாரியம்மன் கோவிலுக்கு நடைபயணம் சென்று வருவது வழக்கமாக வைத்துள்ளார்.
அதேபோல் இந்த ஆண்டும் கடந்த வியாழக்கிழமை அன்று திவ்யாவின் பெற்றோர் ஊரான வசிஷ்டபுரம் என்ற கிராமத்திற்கு சென்று மாலை அணிந்துள்ளார். பின்னர் அவரது பெற்றோர் வீட்டிலேயே தங்கியிருந்து, மறுநாள் வெள்ளிக்கிழமை அன்று சமயபுரம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களோடு நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து திவ்யா உடல் அசதியால் தனது மகளை தூக்கிக்கொண்டு பின்னால் வந்து கொண்டிருந்த ஜெனரேட்டர் இணைப்புடன் ஒலிபெருக்கி கட்டி வந்த ஆட்டோவில் அமர்ந்து பயணம் செய்துள்ளார்.
அப்போது திவ்யா உடல் அசதியால் தூங்கியபோது எதிர்பாராத விதமாக அவரது தலைமுடி ஜெனரேட்டர் காத்தாடியில் சிக்கி, அவரது தலையில் பலமாக அடிபட்டது. இந்நிலையில் ஒலிபெருக்கியின் சத்தத்தால் திவ்யாவின் சத்தம் டிரைவருக்கு கேட்கவில்லை. ஆனால் திவ்யாவின் குழந்தை அருகில் கத்திக் கொண்டிருந்த சத்தம் கேட்டு ஆட்டோ டிரைவர் வந்து பார்த்தபோது, குழந்தைக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை. ஆனால் திவ்யாவுக்கு பலத்த அடிபட்டது தெரியவந்தது. இதனை அடுத்து அவர் நடைபயணம் மேற்கொண்ட பக்தர்களிடம் ஓடிச்சென்று கூறியுள்ளார்.
பின்னர் அவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்த நிலையில், ஆம்புலன்ஸ் வாகனம் வந்து திவ்யாவை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இதுகுறித்து கல்லக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.