வெறி நாய்கள் கடித்து கோவில் ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வீராலிங்கப்பட்டி பகுதியில் பிரசித்தி பெற்ற கோட்டை கருப்பசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் வரும் ஆடி மாதம் திருவிழா நடைபெறுகிறது.இந்த திருவிழாவில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள். பெண்கள் பங்கேற்பதில்லை. இந்நிலையில் பக்தர்கள் திருவிழா நடைபெறும் ஆடி மாதத்திற்கு முன்பே நேர்த்திக்கடனாக ஆடுகளை கோவிலில் விட்டு செல்வார்கள்.
ஆனால் கோவிலில் ஆடுகளை பராமரிக்கும் வகையில் தொழுவம் இல்லை. இதனால் ஆடுகள் அப்பகுதிகளில் சுற்றி திரிகிறது. மேலும் இரவு நேரத்தில் சிலர் ஆடுகளை திருடி செல்கின்றனர். இந்நிலையில் நேற்று அப்பகுதியில் சுற்றித்திரிந்த ஆடுகளை வெறிநாய்கள் கடித்து குதறியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த 10 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது. கோவிலை பராமரிக்கும் இந்து சமய அறநிலைத்துறை தொழுவம் அமைத்து ஆடுகளை பராமரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்