தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் வரும் அக்டோபர் 7ஆம் தேதி அனைத்து நாட்களிலும் கோயிலைத் திறக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பொழுது, “தமிழகத்தில் அனைத்து திரையரங்குகளையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில், கோவில்களை மட்டும் அவர்கள் எதற்காக மூடி வைக்க வேண்டும்.
அரசானது வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களை மூடுவதற்கு ஆணையிட்டுள்ளது. மேலும் கோவிலில் கூட்டமானது வாரத்தின் அனைத்து நாட்களிலும் கோயில் திறந்து இருந்தால் மட்டுமே சீராக அமையும். இதற்காக வருகின்ற ஏழாம் தேதி 11 மணி அளவில் தமிழகம் முழுவதும் அனைத்து கோயில்களையும் திறப்பதை வலியுறுத்தி பாஜக சார்பில் கோவில் முன்பு போராட்டம் நடைபெற உள்ளது. இதில் அறத்தின் வழி நிற்பவர்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இதன் மூலமாக அரசுக்கு அனைத்து கோவிலையும் திறப்பதற்கு வற்புறுத்த வேண்டும்” என்று கூறினார்.