தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு பதிவிற்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தொகுதி பங்கீடு, தேர்தல் வியூகங்களை வகுத்து வருகின்றனர். இதனிடையே அதிமுக கூட்டணியில் தொடர்ந்து இருந்து வந்த சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணியிலிருந்து வெளியேறி, மூன்றாவது அணிக்கு அடித்தளமிட்டது.
மக்கள் நீதி மையம், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைப்பது உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. இதில் மாநில அளவில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதில் சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச் செயலாளராக சரத்குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதில் பேசிய ராதிகா சரத்குமார், நான் தேர்தலில் கோவில்பட்டியில் போட்டியிட வேண்டும், வேளச்சேரியில் போட்டியிட வேண்டும் என்று பலரும் விருப்பம் தெரிவித்துள்ளனர். தலைவர் சொன்னால் நான் எந்த தொகுதியில் வேணும்னாலும் நிச்சயமாக போட்டியிடுவேன் என்று தெரிவித்தார்.
பின்னர் பேசிய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேசிய போது, மக்கள் நீதி மையம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி கூட்டணி உறுதியானது. எங்கள் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் கமலஹாசன் தான் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பேசினார். மேலும், கோவில்பட்டி, ராதாபுரம், வேளச்சேரி தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும், அதன் பலம் தெரியும். இனிமேல் உங்களுக்கு தெரியும் என்ன நடக்கும் என்று ?
ஆலங்குளம், தென்காசி எங்க வேண்டுமானாலும் நிற்கலாம். இந்த முறை உங்களிடம் ஒன்றை ஒன்று கேட்டுக் கொள்கிறேன் விலைபோகாமல் இருங்கள். பணம் கொடுத்து வேட்பாளர்களை வாங்கிவிடலாம் என்று வருவார்கள். பணம் எப்போது வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் ? கோவில்பட்டியில் ராதிகா சரத்குமார் போட்டியிட்டால் வெற்றி உறுதியாகிவிடும் என சரத்குமார் தெரிவித்தார்.