உலக கோப்பை ஆக்கி போட்டி தொடங்க உள்ளதை முன்னிட்டு வ.உ.சி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், கோவில்பட்டி ராஜீவ் காந்தி விளையாட்டு கழகம் சார்பாக விழிப்புணர்வு ஆக்கி போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியை கோவில்பட்டி நகர சபை தலைவர் கருணாநிதி தொடங்கி வைத்தார். மேலும் பரிசளிப்பு விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சிக் கழக செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி தலைமை தாங்கியுள்ளார். இளைஞர்களுக்காக நடத்தப்பட்ட இந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்றுள்ளது. இறுதிப் போட்டியில் திட்டங்குளம் பாரதி ஆக்கி அணியும், கோவில்பட்டி யங் சேலஞ்சர்ஸ் அணியும் மோதிக்கொண்டது.
இந்த ஆட்டத்தில் திட்டங்குளம் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து 40 வயதிற்கு மேல் மூத்தோர் ஆக்கிப்போட்டி நடைபெற்றது. இதில் ஆறு அணிகள் பங்கேற்றது. இறுதி ஆட்டத்தில் கோவில்பட்டி ராஜீவ் காந்தி ஆக்கி அணியும், இலுப்பையூர் அணி ஆக்கி அணியும் மோதிக்கொண்டது. இந்நிலையில் ஆட்ட நேரத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டதால் ஆட்டம் சமனில் முடிந்தது. இதனையடுத்து வெற்றியை நிர்ணயிக்க பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதில் கோவில்பட்டி ராஜீவ் காந்தி அணி 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் பரிசுகளை வழங்கியுள்ளார்.