தூத்துக்குடி மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரம் கோவில்பட்டி தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். கோவில்பட்டியில் கடலை மிட்டாய், விவசாயம், கால்நடை வளர்ப்பு, தீப்பெட்டி உற்பத்தி முக்கியத் தொழில்களாக உள்ளன. கோவில்பட்டி கடலைமிட்டாய் தனி சுவையும் கொண்டது. ஆயத்த ஆடை தயாரிப்பு தொழில்களும் இங்கு உள்ளன. கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழில் ஜிஎஸ்டி வரியால் நலிவடைந்துள்ளதாக உற்பத்தியாளர் மற்றும் தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தேவையான மூலப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மாவட்ட தலைமை மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. கடலை மிட்டாயை அரசு கொள்முதல் செய்து பள்ளி மாணவர்களுக்கான சத்துணவில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்க கட்டப்பட்ட கூடுதல் பேருந்து நிலையத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக இருக்கிறது.