Categories
மாநில செய்திகள்

கோவில் இருந்த இடத்தில் டீ கடையா?….. 9 மாதங்களுக்குள்….. அறநிலையத் துறைக்கு கோர்ட் அதிரடி உத்தரவு….!!!

திருவண்ணாமலை கிரிவல பாதையில் பாலி தீர்த்தம் அருகில் அமைந்திருந்த பக்த மார்க்கண்டேயர் கோவிலை இடித்து காபி கடை அமைத்துள்ளனர் என்று கூறி தமிழ் தேசிய மக்கள் கட்சியின் தலைவர் சிவபாபு என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் ஆக்கிரமிப்பு அகற்றி இடிக்கப்பட்ட கோவிலை மீண்டும் கட்ட உத்தரவிடக் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் கோவில் நிலத்தில் காபி கடை அமைக்கப்பட்டுள்ளது என்று ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து உத்தரவிட்டிருந்தது. அதன்படி குறிப்பிட்ட அந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆணையர், கோவில் இருந்ததையும் இடிக்கப்பட்டது உறுதி செய்தனர். ஆனால் அந்த கோவிலிடம் பெற்றிருந்த சர்வே எண்ணை கண்டறிய முடியவில்லை என்று அறிக்கை அளித்து இருந்தார். அதே நேரத்தில் காபி கடை உரிமையாளர்கள் தங்கள் கடையின் முன்புறம் கோவிலை மீண்டும் கட்டுவதற்கு எந்த ஆட்சேபமும் இல்லை என்று தெரிவித்தனர்.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் ராஜா மற்றும் சௌந்தர் அடங்கிய அமர்வு, கோவிலை பாதுகாக்க வேண்டிய கடமை அறநிலைய துறை அதிகாரிகளுக்கு உள்ளதாகவும், புராதான கோவில்களை அழிக்க அனுமதித்தால், அவற்றை நிர்வகிக்கும் கேள்வி எழாது என்று தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அறநிலைய  துறை ஆணையர் விரிவான விசாரணை நடத்தி கோவிலின் உண்மையான இருப்பிடத்தை மூன்று மாதங்களில் கண்டறிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கோவிலின் உண்மையான இருப்பிடத்தை கண்டறிந்த பின் ஆறு மாதங்களில் கோவிலை மீண்டும் கட்ட வேண்டும் என்றும், கோவில் நிலத்தை காபி கடை உரிமையாளர் ஆக்கிரமித்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த அனைத்து நடைமுறைகளும் 9 மாதங்களுக்குள் முடித்து புகைப்பட ஆதாரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறநிலைய  துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Categories

Tech |