கோவில்களில் உள்ள சாமி சிலைகளை கடத்திய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கோவில்களில் உள்ள சாமி சிலைகள் மற்றும் தங்க நகைகள் போன்றவைகள் தொடர்ந்து திருடப்பட்டுள்ளது. இதன் காரணமாக போலீஸ் சூப்பிரண்டு நிஷா கடத்தல் கும்பலை கண்டுபிடிப்பதற்காக 6 பேர் கொண்ட தனிப்படை குழுவை அமைத்தார். இவர்கள் சாமி சிலைகள் மற்றும் தங்க நகைகள் திருடப்பட்ட கோவில்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் குத்தாலம் அருகே திருமங்கலம் பகுதியில் தனிப்படை காவல்துறையினர் மற்றும் குத்தாலம் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை மறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் அவர்கள் கையில் இருந்த பையை சோதனை செய்துள்ளனர். அந்தப் பையில் கோவில் தங்க நகைகள் இருந்துள்ளது. இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பதும், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பதும் அவர்கள் பல்வேறு கோவில்களில் உள்ள சாமி சிலைகள் மற்றும் தங்க நகைகளை கடத்தியதும் தெரிய வந்தது.
இதனையடுத்து கார்த்திகேயன் மற்றும் பாஸ்கர் கொடுத்த தகவலின் பேரில் 2 வீடுகளில் காவல்துறையினர் அதிரடியாக சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் ஒரு பிள்ளையார் சிலை, பித்தளை விளக்குகள் மற்றும் மணிகள், 8 கிலோ எடை கொண்ட ஒரு உலோகச் சிலை, 15 கிலோ எடை கொண்ட அம்மன் சிலை, ஐயப்ப சுவாமி சிலை, 4 சவரன் தங்க நகைகள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். அதன்பிறகு நாராயணசாமி என்பவருடைய வீட்டில் திருடப்பட்ட நகைகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.