பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்த தம்பதி உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சுகண்ணுகலுங்கு பகுதியில் இசக்கியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கூட்டத்தில் நின்ற ஒரு பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். உடனடியாக அந்த பெண் கூச்சலிட்டுள்ளார். அந்த சத்தத்தை கேட்ட பொதுமக்களும், கோவில் நிர்வாகிகளும் இணைந்து தங்க சங்கிலியை பறித்த 3 பேரை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் சென்னை கொளத்தூரை சேர்ந்த குமாரவேல், அவரது மனைவி குமாரி மற்றும் மணிகண்டன் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் மீது ஏற்கனவே போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. கோவில் திருவிழாக்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மூன்று பேரும் கைவரிசை காட்டியுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.