தமிழ்நாடு கோவில்களில் 1977ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இல்லாத தங்க நகைகளை உருக்கி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் காணிக்கையாக பெறப்பட்ட தங்க நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி டெபாசிட் செய்ய முடிவெடுத்தது தொடர்பான அறிவிப்பிற்கு தடை விதிக்கக்கோரி சென்னையை சேர்ந்த ஏ.வி கோபால கிருஷ்ணன், திருவள்ளூரைச் சோந்த எம்.சரவணன் ஆகியோா் தனித்தனியே உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.மகாதேவன், அப்துல் குத்தூஸ் ஆகியோா் அடங்கிய விடுமுறை கால சிறப்பு அமா்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில் மனுதாரர்கள் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், “கோவில்களில் என்னென்ன நகைகள் உள்ளன என்பதை குறித்து எவ்வித முறையான சான்றுகளும் இல்லை. எனவே தங்கத்தை உருக்குவதற்கு சிறப்பு தணிக்கை செய்யப்பட்ட பின்னரே உருக்கவேண்டும்” என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞா் ஆா்.சண்முகசுந்தரம், “தங்க நகைகளானது 1977ஆம் ஆண்டு முதல் உருக்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே 5 லட்சம் கிராம் கோயில் தங்க நகைகள் உருக்கப்பட்டு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. சுமாா் ரூ.11 கோடி வரை வட்டி வருவாய் இதன் மூலம் கிடைக்க பெறுகிறது” என்று கூறினார்.
இதனையடுத்து உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகளில் ஒருவர் உயா் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் இருவா் ஆகியோா் முன்பு தணிக்கை செய்யப்பட்ட பின்னர்தான் கோயில் நகை உருக்கப்படும் என்று அரசாணை ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.