நீலகிரியில் கோவில் பூசாரியாக நியமிக்கப்பட்ட 7 வயது சிறுவனுக்கு தடையில்லா கல்வியை உறுதி செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 7 வயது சிறுவன் கோவில் பூசாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக சிவன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். நீலகிரி படுகர் இன மக்களின் குல தெய்வமான கெத்தை அம்மன் கோவில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. அங்கு இரண்டாம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுவன் பூசாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். பூசாரியாக நியமிக்கப்படும் சிறுவர்கள் தங்களுக்கான உணவை தாமே சமைத்து சாப்பிடுவது, பசுக்களின் பாலை எடுத்து பயன்படுத்துவது போன்றவற்றினால் அவர்களின் கல்வி தடைபடுகிறது. இது கட்டாய கல்வி உரிமை சட்டத்திற்கு எதிரானது என்று தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி தமிழக அரசு தரப்பில் கோவில் மரபுப்படி சிறுவன் கோவிலை விட்டு வெளியில் வரக்கூடாது என்றும், தமிழகத்தில் வீடுதோறும் கல்வி திட்டம் மூலம் தற்போது அந்த சிறுவன் 3-ம் வகுப்பு படிப்பதாகவும், மாணவர்களுக்கு வழங்கப்படும் இ.எம்.ஐ.எஸ். எண் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்களின் கல்வி தடைபடாமல் நடக்கும் என்று தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் சிறுவனுக்கு தொடர்ந்து கல்வி கற்பதற்கான வாய்ப்புகளை அரசு ஏற்படுத்திக் கொடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.