ஈரோடு மாவட்டத்திலுள்ள புதுகொத்துக்காடு கிராமத்தில் புகழ்பெற்ற வீரமாத்தி அம்மன் கோவில் அமைந்துள்ளது. 8 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த கோவிலில் பூசாரியை தேர்ந்தெடுக்கும் வினோத திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் புதிய பூசாரியை தேர்ந்தெடுக்க முடிவு செய்தனர். அதன்படி சில விதிமுறைகளை பொதுமக்கள் அறிவித்த நாள் முதல் அனைவரும் தவறாமல் கோவிலுக்கு வந்து விழாவில் கலந்து கொண்டனர். அப்போது பக்தர்கள் யாருக்காவது சாமி வந்தால் அவர் தீச்சட்டியை எடுத்து கோவிலை சுற்றி வர வேண்டும்.
சம்பந்தப்பட்ட நபர் கைகளில் இருந்து தீச்சட்டியை கீழே போட்டு விட்டால் கோவிலுக்கு 3 லட்ச ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. நேற்று மதியம் கோவில் பூசாரியை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்ற போது 11-ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுவனுக்கு சாமி அருள் வந்தது. அந்த சிறுவன் தீச்சட்டியை எடுத்து கோவிலை வலம் வந்ததால் பொதுமக்கள் அந்த சிறுவனை பூசாரியாக ஏற்றுக்கொண்டனர். அடுத்த 8 ஆண்டுகளுக்கு அந்த சிறுவனே கோவில் பூசாரியாக இருப்பார் என கூறப்படுகிறது.