கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து வருகிற 21-ஆம் தேதி முதல் மதுரை, திருச்சி உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு 240 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது, கோவையிலிருந்து மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு 100 பேருந்துகளும், திருச்சி மற்றும் சேலத்திற்கு தலா 50 பேருந்துகளும், தேனிக்கு 40 பேருந்துகளும் என மொத்தம் 240 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு பேருந்துகள் அனைத்தும் வெவ்வேறு பேருந்து நிலையங்களில் இருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரூர், திருச்சி செல்லும் பேருந்துகள் சூலூர் பேருந்து நிலையத்தில் இருந்தும், மதுரை, திருநெல்வேலி, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் சிறப்பு பேருந்துகள் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்தும், திருப்பூர், சேலம், ஈரோடு செல்லும் சிறப்பு பேருந்துகள் கோவை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்தும், சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம் செல்லும் பேருந்துகள் சாய்பாபா காலனியில் இருக்கும் புதிய பேருந்து நிலையத்திலிருந்தும் இயக்கப்பட உள்ளது. மேற்கண்ட பேருந்து நிலையங்களுக்கு செல்வதற்கும் பயணிகளுக்காக உக்கடம், காந்திபுரம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.