தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் பின்னர் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், படிப்படியாக அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது.
தமிழகத்திலும் அந்த வைரஸ் வேகம் தற்போது அதிகரித்துள்ளது. அதனால் மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவை மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட மாவட்ட ஆட்சியர் சமீரன் கட்டுப்பாடு விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை. இதை மீறுபவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.