சூலூர் சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டு வருகின்றது.
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் மேட்டூர் லட்சுமி நாயக்கன் பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி கடந்த 1952 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்போது இந்த பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை வெறும் 15 மாணவ மாணவிகள் மட்டுமே பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமையாசிரியர் லட்சுமணசாமி இந்த பள்ளியில் அமைந்துள்ள கிராமத்தின் மொத்த மக்கள் தொகையே 500 தான் இருக்கும்.
இங்கு பெரும்பாலான விவசாயிகள், விவசாயத் தொழில் செய்பவர்களாகவும் உள்ளனர். அருகிலுள்ள கிராமங்களில் அரசு பள்ளிகள் இருப்பதால் லட்சுமி நாயக்கன் பாளையத்தை சேர்ந்த குழந்தைகள் மட்டுமே இந்த பள்ளியில் பயின்று வருகின்றனர். இதனால் இங்கு மிக குறைந்த அளவிலேயே மாணவர்கள் சேர்க்கை உள்ளது. இங்கு தொடக்கக் கல்வியை முடிக்கும் மாணவர்கள் உயர்கல்விக்காக பக்கத்து ஊருக்கு சென்று அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் பரிசுத்தொகையை திட்டத்தை தலைமையாசிரியர் லட்சுமணசாமி அறிவித்துள்ளார்.
அதன்படி இந்த கல்வி ஆண்டில் சேரும் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் பரிசளிப்பதாக துண்டு பிரசுரம் அடித்து கிராமத்தில் விநியோகித்து வருகிறார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது “கடந்த ஆண்டும் இதே போன்று பரிசுத் தொகை திட்டத்தை அறிவித்தேன். அப்போது 3 மாணவர்கள் சேர்ந்தனர். அவர்களுக்கு தலா 1000 ரூபாய் என தனது ஊதியத்திலிருந்து வழங்கினேன். இந்த கல்வி ஆண்டில் எத்தனை மாணவர்கள் சேருவார்கள் என்பது தெரியவில்லை. இருப்பினும் எத்தனை மாணவர்கள் சேர்ந்தாலும் அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதாக நான் அறிவித்துள்ளேன். ஏனெனில் அரசு பள்ளியை நாடி அனைவரும் படிக்க வர வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம்” என்று அவர் கூறியுள்ளார்.