இளம்பெண்ணை கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அன்னூர் அருகே கரியாம்பாளையம் மசக்கவுண்டன்புதூர் பகுதியில் சண்முக சுந்தரம் (38) என்பவர் வசித்து வருகிறார். இதே பகுதியில் வசிக்கும் 27 வயது இளம்பெண்ணை சண்முகசுந்தரம் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சண்முகசுந்தரம் தன்னுடைய காதலை அந்த பெண்ணிடம் சொல்ல இளம்பெண் அதற்கு மறுப்பு தெரிவித்து தன்னுடைய பெற்றோரிடம் சென்று பெண் கேட்குமாறு கூறியுள்ளார். உடனே சண்முக சுந்தரமும் இளம் பெண்ணின் பெற்றோரிடம் பெண் கேட்டுள்ளார். ஆனால் இளம் பெண்ணின் பெற்றோர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சண்முகசுந்தரம் ஊர் முழுவதும் தான் இளம்பெண்ணை காதலித்து வருவதாகவும், அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் இளம்பெண் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தபோது சண்முகசுந்தரம் காரில் சென்று அவரை வழிமறித்துள்ளார். அதன்பின் இளம்பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். அதற்கு இளம் பெண் மறுக்கவே சண்முகசுந்தரம் அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி சென்று ஒரு கோவிலில் வைத்து கட்டாயமாக திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார்.
அந்தப் பெண் சண்முகசுந்தரத்திடம் இருந்து தப்பித்து அன்னூர் காவல் நலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு இளம்பெண் நடந்ததை எல்லாம் கூறி புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சண்முகசுந்தரம் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த விஜயகுமார் (43) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் 2 பேரும் பா.ஜ.க கட்சியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.