கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் வீட்டில் இருந்து 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது.
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த ஆறு பேர் உபவா சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இதனை அடுத்து இந்த வழக்கை கோவை மாநகர போலீசார் விசாரித்து வந்த நிலையில் தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து இந்த சம்பவத்தில் பலியான ஜமேஷா முபின் மற்றும் முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முஹம்மது நவாஸ் இஸ்மாயில், அப்சர் கான் போன்ற ஏழு பேர் மீதும் 120b, 153a சட்ட பிரிவு 16 மற்றும் 17 ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் என்ஐஎ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனை அடுத்து இந்த வழக்கு முதல் தகவல் அறிக்கை தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் வெடி விபத்தை ஏற்படுத்த ஜமேஷா முபின் திட்டமிட்டு இருப்பதாகவும் அவரின் வீட்டிலிருந்து பொட்டாசியம் நைட்ரேட், பிளாக் பவுடர், ஆக்சிஜன் சிலிண்டர், அலுமினியம் பவுடர், சிவப்பு பாஸ்பரஸ், இரண்டு மீட்டர் நீளமுள்ள திரி, கண்ணாடி துகள்கள், சல்பர் பவுடர், பேட்டரிகள், பயர் பேக்கிங், டாப் கையுறை, நோட்டு புத்தகம், ஜிஹாத் தொடர்பான குறிப்பு அடங்கிய டைரி, கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.