கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
நாகை அருகே சிக்கல் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த ஹஸன் அலி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் கடந்த 2019 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவருடைய வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டில் இருந்து மடிக்கணினி உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றி தேசிய புலனாய்வு முகமை பிரிவு சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதன்பின் அவர் ஜாமினில் வெளியே வந்துள்ளார். இந்த சூழலில் கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே சில அமைப்புகளை சேர்ந்தவர்களின் வீடுகளில் தமிழக போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி ஹஸன் அலி வீட்டில் நேற்று காலை நாகை வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையிலான போலீசார், தகவல் தொழில்நுட்ப பிரிவு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், கிராம நிர்வாக அலுவலர் பாக்கிய ராணி போன்ற முன்னிலையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை ஈடுபட்டுள்ளனர். அதேபோல் நாகை அருகே உள்ள மஞ்சள் கொள்ளை பகுதியைச் சேர்ந்த ஹாரிஸ் முகமது என்பவர் வீட்டிலும் சோதனை மேற்கொண்டுள்ளனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் இரண்டு வீடுகளிலும் எந்தவிதமான ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என போலீசார் கூறியுள்ளனர்.