கோவை குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவையிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கோவை குற்றால அருவி. இந்த சுற்றுலா தளம் வனப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ளதால் இயற்கை அழகினையும், வனவிலங்குகளையும் கண்டு ரசிப்பதற்கும், அருவியில் குளிப்பதற்கும் தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருவது வழக்கம். அருவியில் குளித்துவிட்டு வனப்பகுதியில் உள்ள இயற்கை அழகை கண்டு ரசிப்பது வழக்கம்.
தற்போது சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கோவை குற்றாலத்திற்கு தண்ணீர் வரத்து அதிக அளவில் வர தொடங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு இன்று, காலையும் வனப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் பாறைகள் முழுவதும் மறைந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருவதற்கும், குளிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வனத்துறையினர் அறிவிப்பு பலகையை வைத்துள்ளனர்.