கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து திருச்சிக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக புதிதாக மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டது. இந்த மேம்பாலம் ரெயின்போ காலனி பகுதியில் இருந்து முதல் பங்குச் சந்தை கட்டிடம் வரை அமைந்துள்ளது. இதற்காக 253 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த மேம்பாலத்தின் பணிகள் முடிவடைந்ததால் கடந்த மாதம் 11-ஆம் தேதி திறக்கப்பட்டு போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டது. இந்த மேம்பாலம் திறக்கப்பட்ட ஒரு சில நாட்களிலேயே அடுத்தடுத்து நடந்த விபத்துகளில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் காரணமாக மேம்பாலம் தற்காலிகமாக மூடப்பட்டு 10 இடங்களில் புதிதாக வேகத்தடைகள் கட்டப்பட்டது. அதன் பிறகு விபத்து தடுப்பு பலகைகள் மற்றும் ஒளிரும் பட்டைகள் போன்றவைகளும் வைக்கப்பட்டது.
கடந்த 9-ம் தேதி பாலம் மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது. அப்போது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த விற்பனை பிரதிநிதி பாலத்தின் மீது ஏறிய போது திடீரென நிலை தடுமாறி பாலத்தின் தடுப்பு சுவரின் மீது மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அதிகாரிகள் பாலத்தை நேரில் சென்று ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் போது பாலம் 70 டிகிரி சாய்வாக இருப்பதால், வடிவமைப்பு மாற்றி அமைக்கப்படும் என கூறினர். இந்நிலையில் நேற்று முன்தினம் ரெயின்போ காலனியில் இருந்து மேம்பாலத்தின் மீது ஒரு கார் ஏறியது. அப்போது கார் ஓட்டுநர் வேகத்தடையை கவனிக்காததால் திடீரென பிரேக் போடவே பின்னால் வந்த ஒரு காரின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 2 கார்களின் முன் பகுதியும் சேதமடைந்தது.
இந்த விபத்தில் கார் ஓட்டுநர்கள் 2 பேரும் லேசான காயங்களுடன் உயிர்த்தப்பினர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படவே உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உடனடியாக விபத்து சிக்கிய கார்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் பாலம் திறக்கப்பட்ட ஒரு மாதத்தில் அடுத்தடுத்த 4 விபத்துக்கள் நடந்துள்ளதால் பாலத்தில் செல்வதற்கு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அச்சப்படுகின்றனர். எனவே விபத்து நடப்பதை தடுப்பதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.