கோவை மாவட்டத்தின் புதிய காவல் ஆணையராக வி.பாலகிருஷ்ணன் கடந்த திங்கள்கிழமையன்று பதவியேற்றுக்கொண்டார். இதனையடுத்து அவருடைய தலைமையில் முதல் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் வருகிற 22-ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொதுமக்களிடம் இருந்து தினமும் பகல் 12 மணி முதல் ஒரு மணி வரை மனுக்கள் பெறப்படுகிறது. மிகவும் அவசரமான சூழ்நிலையில் மட்டுமே நேரம் கருதாமல் மனுக்கள் பெறப்படும்.
தமிழக முதல்வரின் அறிவிப்பின்படியும், டிஜிபியின் உத்தரவின்படியும் ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாம் புதன் கிழமைகளில் காலை 10 மணி முதல் ஒரு மணி வரை பொதுமக்களிடம் நேரடியாக மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு அறிவிப்பின்படி முதல் வாரமாக வரும் 22ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணி முதல் ஒரு மணி வரை போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்கள் பெறப்படும். இதனால் இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.