கோவை மக்கள் குசும்பு மட்டுமல்ல ஏமாற்றமும் செய்துவிடுகிறார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்
திமுக செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதி திமுக ஆட்சி அமைத்தபோது அமைச்சரவையில் இடம் பெறுவார் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அவர் எம்எல்ஏ-வாக தொடர்கிறார். இதனிடையே உதய நிதி அமைச்சராக வேண்டும் என்பது மக்களின் விருப்பம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட பல அமைச்சர்கள் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் கோவை மாவட்டம் காளடியில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று மதியம் ஒரு மணி அளவில் நடைபெற்றது.
இந்த முகாமை இளைஞரணி செயலாளர் உதயநிதி தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர் தனக்கு அமைச்சர், துணை முதலமைச்சர் போன்ற பதவிகளுக்கு ஆசை இல்லை என்று கூறினார். என்னை இந்த பொறுப்புகளுக்கு நியமிக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் பல அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அந்த பொறுப்புகளுக்கு ஆசைப்படுபவன் நான் இல்லை என்று அவர் கூறியிருந்தார்.
பின்னர் பேசிய அவர் கோவை மக்கள் குசும்பு மட்டுமல்ல ஏமாற்றமும் செய்து விடுகிறார்கள் என்று கூறினார். இதே கோயம்புத்தூருக்கு கடந்த சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்திற்கு இரு நாட்கள் தங்கியிருந்து இந்த மாவட்டம் முழுவதும் பிரச்சாரம் செய்தேன் . சட்டமன்றத் தேர்தலில் 5 தொகுதியில் ஜெயித்துவிடுவோம் என நினைத்தேன். ஆனால் 10 தொகுதியில் ஒரு தொகுதி கூட ஜெயிக்கவில்லை. தமிழ்நாடு முழுக்க ஜெயித்தோம். கோவை மக்களாகிய நீங்கள் ஏமாற்றி விட்டீர்கள். அடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிறது, நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற போது தமிழகத்தின் நிலை எப்படியிருந்தது என்பது உங்களுக்குத் தெரியும்.