மழை பெய்ய வேண்டி மரங்களுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் கோவை மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.
கோவை மாவட்டம் ஆனைமலை ஏ வி ஆர் நகரில் பிரசித்தி பெற்ற வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. மழை பெய்ய வேண்டி இந்த கோவிலில் உள்ள அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமணம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மழை இல்லாமலும், நோய் நொடி காரணமாகவும் மக்கள் பாதிக்கப்படும்போது அரச மரத்தை சிவபெருமான் வடிவிலும், வேப்ப மரத்தை பார்வதி தேவி வடிவிலும் நினைத்து திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்பது ஐதீகம்.
தற்போது தொற்று பரவல் அதிகரித்து வருவதால் மக்களை அந்த நோயிலிருந்து காக்கவும், மழை வேண்டியும் அரச மரத்துக்கும் வேப்ப மரத்துக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. முன்னதாக பக்தர்கள் 16 வகையான சீர்வரிசை பொருள்களை கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்து கணபதி ஹோமம் நடத்தி மரங்களுக்கு திருமணம் செய்து வைத்தனர். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.