காலநிலை மாற்றம் புவி வெப்பமயமாதல் போன்ற ஆபத்துகளை உலகம் எதிர்கொண்டு வருகின்றது. மேலும் பாலிதீன் பைகளால் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய சூழல் சீர்கேடு நடைபெறுகிறது. இது பற்றி பேசிய முதல்வர் ஸ்டாலின் பிளாஸ்டிக் உலகம் முழுவதும் அழிக்க முடியாத குப்பைகளாக குவித்து இருக்கின்றது. இதனால் மண், நீர், காற்று என அனைத்து சுற்றுச்சூழலும் மாசுபட்டு உயிரினங்கள், கடல்வாழ் உயிர்கள் அனைத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தி மனிதர்களுக்கும் ஆபத்தை விளைவித்து இருக்கின்றது.
இதனை தடுக்கும் வகையில் மீண்டும் மஞ்சப்பை இயக்கம் மூலமாக பிளாஸ்டிக் பைகளுக்கு மாறாக சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்துவதை ஊக்குவிக்க திட்டமிட்டு இருக்கின்றோம் என்று தெரிவித்த அவர் கடந்த டிசம்பர் மாதம் இந்த திட்டத்தை தொடங்கி வைத்து இருக்கின்றார். மேலும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சள் பைகளை பயன்படுத்தும் விதமாக மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தை பொது மக்களிடம் கொண்டு செல்லும் விதமாக சந்தை பேருந்து நிறுத்தங்கள் போன்ற பொது இடங்களில் மஞ்சப்பை இயந்திரம் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த வாரம் பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் கோவை மாநகராட்சி பகுதிகளில் ஒரு முறை மட்டுமே உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்கும் விதமாக மாநகர பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் மாநகராட்சி அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பல்வேறு இடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதில் 953 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து 1,53,400ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தை தீவிரமாக கடைப்பிடிக்கும் விதமாகவும் பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் சோதனையில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.