கோவையில் இருந்து டெல்லி வரை முதன்முறையாக சரக்கு ரயில் சேவை இன்று தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையிலிருந்து பிற மாவட்டங்கள் மட்டுமல்லாமல் வெளி நாடுகளுக்கும் பல்வேறு பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது. இவற்றில் விவசாய விளைபொருட்கள், தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் போன்றவை அடங்கும். மேலும் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் வகையில் பேருந்து மற்றும் ரயில் வசதிகள் ஏற்கனவே செய்யப்பட்டிருக்கின்றது.
அதில் சரக்கு போக்குவரத்திற்கு முக்கிய பங்கு உள்ளது. இந்த நிலையில் புதிய தொழில் நிறுவனங்கள் அதிகரிக்கும் உற்பத்தி பொருட்களால் சரக்குப் போக்குவரத்தை விரிவாக்கம் செய்ய வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டிருக்கின்றது. இதனை பூர்த்தி செய்யும் வகையில் தெற்கு ரயில்வே மிகமுக்கியமான நடவடிக்கையை எடுத்திருக்கிறது. அதாவது கோவை முதல் டெல்லி படெல் நகர் வரையிலான சரக்கு சேவை இன்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருக்கின்றது.
மேலும் இது வாராந்திர சேவையாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த ரயிலை ரயில்வே கோட்ட மேலாளர் கௌதம் ஸ்ரீநிவாஸ் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். கோவை, டெல்லி பட்டேல் நகர் சரக்கு ரயில் ஆனது திருப்பூர், ஈரோடு, சேலம், ரேணிகுண்டா போன்ற ரயில் நிலையங்கள் வழியாக பயணிக்கும் என கூறப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் வாரம் இருமுறை இந்த பார்சல் ரயில் சேவை இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதன் மூலமாக கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உற்பத்தி பொருட்கள் வட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட இருக்கின்றது. அதனால் புதிய வர்த்தகத்திற்கான வாய்ப்புகள் உருவாகும் அதன் மூலமாக வருவாய் உயரும். மேலும் தமிழகத்தின் தொழில் வளம் பெருகும் என தொழில்முனைவோர்கள் தெரிவித்துள்ளனர்.