பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளுக்கான பொது நுழைவுத்தோ்வு (க்யூட்) முடிவுகள் வரும் 15ம் தேதி வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியக்குழு நிர்வாகி ஜகதீஷ் குமார் அறிவித்து இருக்கிறார். மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்காக அறிமுகப்படுத்தப்பட்ட நுழைவுத்தேர்வானது சென்ற ஜூலை மாதம் துவங்கி ஆகஸ்ட் மாதம் முடிவடைந்தது. இந்நிலையில் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வருகிற 15ஆம் தேதி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இல்லையெனில் அடுத்த ஓரிரு நாள்களில் தேர்வு முடிவுகள் வெளியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளுக்கு க்யூட் நுழைவுத்தோ்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவா் சோ்க்கை நடைபெறும். 12ஆம் வகுப்பு தோ்வு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்று கடந்த மாா்ச்மாதம் ஜகதீஷ் குமாா் அறிவித்திருந்தாா். நடப்பு ஆண்டு நடந்த க்யூட் நுழைவுத்தோ்வில் கலந்துகொள்வதாக 44 மத்திய பல்கலைக்கழகங்கள், 12 மாநில பல்கலைக்கழகங்கள், 11 நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், 19 தனியாா் பல்கலைக்கழகங்கள் போன்றவை அறிவித்திருந்தது.