மத்திய பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பொது நுழைவுத் தேர்வை கண்டித்து தி.மு.க கட்சியினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.
நாடு முழுவதிலும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள இளங்கலை பட்டப் படிப்பில் சேர்வதற்கு க்யூட் என்ற நுழைவுத் தேர்வை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இந்த நுழைவுத்தேர்வு தமிழகத்தில் உள்ள திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் மாவட்டம் அவிநாசி மகளிர் நிகர்நிலைப் பல்கலைக்கழகம், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகம் போன்றவற்றில் நடைபெறுகிறது. இந்த நுழைவுத் தேர்வை ரத்து செய்யக்கோரி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் முன்பாக தி.மு.க கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி தலைமை தாங்கினார். இந்த நுழைவுத்தேர்வு கிராமப்புறத்தில் வசிக்கும் ஏழை, எளிய மாணவர்களை பாதிக்கும் என்றும், தேர்வை உடனடியாக ரத்து செய்யாவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் எனவும், இந்த பல்கலைக் கழகம் மக்கள் பல்கலைக் கழகமாக மாற்றப்படும் எனவும் பாலபாரதி கூறினார். இந்தப் போராட்டத்தில் தி.மு.க கட்சியின் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் போராட்டத்தின் முடிவில் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமநாதனை சந்தித்து நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டி கோரிக்கை மனு கொடுத்தனர்.