திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல்-வத்தலக்குண்டு பிரதான மலைப் பாதையில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக 10க்கும் அதிகமான இடங்களில் பாலங்கள் அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இப்பணிகள் துவங்கி ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை வேலை நிறைவடையவில்லை. இதன் காரணமாக மழைக் காலங்களில் பாலங்கள் உள்ள பகுதியில் தண்ணீர் தேங்கி அந்த மலைப் பாதை சகதிக்காடாக மாறி விடுகிறது. இந்நிலையில் வாகனங்கள் சகதியில் சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இதனிடையில் பகல் நேரங்களில் சகதியில் சிக்கும் வாகனங்கள் டிரைவர்கள் மற்றும் பயணிகள் உதவியுடன் மீட்கப்படுகிறது. ஆனால் இரவுநேரங்களில் சகதியில் சிக்கும் வாகனங்களை மீட்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் நேற்றிரவு கொடைக்கானல் மலைப் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி காணப்பட்டது. மேலும் சாலைகளில் மழை நீர் கரைபுரண்டு ஓடியது. அதிலும் குறிப்பாக கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப் பாதையில் பாலம் அகலப்படுத்தும் பணிகள் நடைபெறும் இடங்களில் மலைப்பாதை சகதிக் காடாக மாறியது.
இதற்கிடையில் கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா வாகனங்கள் மலைப் பாதை சகதியில் சிக்கிக்கொண்டது. இதனால் வாகனஓட்டிகள், சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்தனர். அதுமட்டுமல்லாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மலைப் பாதையின் இருபுறமும் வாகனங்கள் போக முடியாமல் அணிவகுத்து நின்றது. ஆகவே பாலம் அகலப்படுத்தும் பணிகளை நெடுஞ்சாலைத் துறையினர் விரைந்து முடிக்க வேண்டும். அத்துடன் மலைப் பாதையிலுள்ள சகதிகளை அகற்றி, தார்சாலை உடனே அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.