மகனை கொன்று தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள கோவில்பதாகை மசூதி தெருவில் முகமது சலீம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு சோபியா நஜிமா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு மாற்றுத்திறனாளியான அப்துல் சலீம் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அப்துல் சலீமிற்கு பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் தம்பதியினர் மன உளைச்சலில் இருந்துள்ளனர்.
இந்நிலையில் முகமது சலீம் தனது சகோதரி சலீனா என்பவரின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளார். அதில் இந்த குறுஞ்செய்தியை படிக்கும் போது நாங்கள் எங்கள் வாழ்க்கையை முடித்து இருப்போம். இந்த இடம் மற்றும் பொருட்களை நீங்கள் எடுத்து கொள்ளுங்கள். எனது சகோதரியின் மகளுக்கு நகைகளை கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை குறுஞ்செய்தியில் அனுப்பியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சலீனா தனது கணவருடன் உடனடியாக தனது சகோதரன் வீட்டிற்கு விரைந்து சென்று பார்த்துள்ளார்.
அப்போது தலை முழுவதும் பாலித்தீன் பையால் சுற்றப்பட்ட நிலையில் அப்துல் சலீம் படுக்கை அறையில் சடலமாக கிடந்துள்ளார். மேலும் முகமது சலீம் மற்றும் சோபியா ஆகிய இருவரும் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு சலீனா அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 பேரின் சடலங்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.