நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் படுகர் இன மக்கள் அதிக அளவில் வாழ்கின்றனர். இவர்களது பண்டிகையான ‘சக்காலாத்தி’ பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையில் முன்னோர்களுக்கு படையல் வைத்து வழிபடுவார்கள். இதற்காக அவர்கள் நேற்று முன்தினம் வீடுகளை சுத்தம் செய்து காப்பு கட்டினர். அதன்பிறகு முன்னோர்களை வரவேற்பதற்காக அருகம்புல், கொதுங்கு, பிலிகிச்சை, உத்தரனை மற்றும் ஹீம்ரி ஆகிய மூலிகைச் செடிகளை வீடுகளின் கூரை மற்றும் மாட்டு தொழுவத்தின் கூரையில் கட்டினர்.
அதுமட்டுமில்லாமல் நேற்று மாலை 5 மணிக்கு வீட்டின் முன்பு நட்சத்திரம், சூரியன், சந்திரன் மற்றும் விவசாய கருவிகள் ஆகிய படங்களை கோலமாகவிட்டனர். அதன்பிறகு தங்கள் முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை தயார் செய்தனர். ஒவ்வொரு கிராமங்களிலும் உள்ள தோட்டமனை என்று அழைக்கப்படும் வீட்டைச் சேர்ந்த ஒருவர் பெரிய மண் சட்டியில் முன்னோர்களுக்காக சமைத்து வைத்த உணவை வீடு வீடாகச் சென்று சேகரித்தனர்.
இதையடுத்து ஊருக்குப் பொதுவான இடத்தில் வைத்து அந்த உணவுகளை முன்னோர்களுக்கு படையலிட்டு வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒருவர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து முன்னோர்களுக்காக தயாரித்த உணவுகளை பக்கத்தில் வீட்டில் இருப்பவர்களுக்கு பகிர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாடினர்.