கடந்த 2009-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி நகைச்சுவை நடிகரும், குணச்சித்திர நடிகருமான நாகேஷ் காலமானார். நேற்று அவருடைய நினைவு நாளானதையொட்டி, அவரை பற்றி பலரும் பகிர்ந்துள்ளனர். மேலும் நடிகர் கமலஹாசன் மறைந்த நாகேஷிற்கு தமிழக அரசானது, மரியாதை செலுத்த வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இந்திய சினிமாவின் இணையற்ற நடிகர்களில் முத்திரைப் பதித்தவர்களில் நாகேஷும் ஒருவர்.
தமிழக மக்களை ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து மகிழ்ச்சி படுத்தியுள்ளார். மேலும் இவரது நடிப்பை இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ், தமிழகத்தில் சார்லி சாப்லின் என்றெல்லாம் ஊடகங்கள் புகழ்ந்துள்ளது. இவரது கலைப் பயணமானது 1958 தொடங்கி 2008ஆம் ஆண்டு அவர் ஒரு அரை நூற்றாண்டுகள் நீடித்திருந்தது. அவர் மறைந்து 12 ஆண்டுகள் ஆன பிறகும் கூட அவர் மீதான அரசின் புறக்கணிப்பு தொடர்வது ஒரு சக கலைஞனாக எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
எனவே தமிழ்நாடு அரசானது இவரின் கலைப் பங்களிப்பை சிறப்பிக்கும் வகையில் இவரது பெயரை, சென்னையிலுள்ள ஒரு சாலைக்கு வைப்பதும், ஏதாவது ஒரு விருதினை இவரது பெயரில் உருவாக்குவதும், எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன வளாகத்தில் நாகேஷின் சிலையை அமைப்பதுமே குறைந்தபட்சமாக அவரை சிறப்பிக்கும் செயலாகும். தமிழக அரசானது கலைஞர்களை போற்றும் விதமாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.