சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சக தொழிலாளியை கொலை செய்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எப்போதும் பரபரப்பாக இருக்கும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பலர் சுமைதூக்கும் பணியை செய்து தங்களது வருமானத்தை ஈட்டி வருகின்றனர். இந்நிலையில் அப்படி சுமை தூக்கும் தொழிலாளியான ராஜா என்பவருக்கும் குமார் என்பவருக்கும் இடையில் சுமை தூக்குவது தொடர்பாக ஏதோ தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ராஜாவின் மீது குமார் பயங்கர கோபமாக இருந்துள்ளார். இந்நிலையில் ராஜா ரயில் நிலையத்தில் மது போதையில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது குமார் எந்த பதற்றமும் இல்லாமல் ஒரு பெரிய கல்லை எடுத்து செல்லும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அதன்பின் அந்தக் கல்லை ராஜாவின் மீது போட்டுவிட்டு குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்த ராஜாவின் உடலை பார்த்த சிலர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ராஜாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.மேலும் தப்பி ஓடிய குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.