பள்ளி மாணவன் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் நேரு நகரில் சக்கரவர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிஷாந்த் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நிஷாந்த் தன்னுடன் படிக்கும் ஒரு மாணவியுடன் சைக்கிளில் நல்லூர் பகுதிக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து மஞ்சு என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இருந்த 5 அடி தண்ணீர் தொட்டி மீது நின்று கொண்டு இருவரும் செல்பி எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது எதிர்பாராதவிதமாக நிஷாந்த் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து மூழ்கிவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.