Categories
அரசியல் சேலம் மாவட்ட செய்திகள்

சங்ககிரி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

சேலம் மாவட்டத்தின் சங்ககிரி தொகுதி லாரி பட்டறை தொழிலுக்கு புகழ்பெற்றதாகும். இப்பகுதியில் லாரி பாடி பில்டிங் தொழிலும் அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. விவசாயத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்காததால் மானாவாரி பயிர்கள் மட்டுமே இப்பகுதியில் விளைவிக்கப்படுகின்றன. எனினும் காவிரி கரையோரம் உள்ள 3 ஊராட்சிகளில் உள்ள விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்கின்றனர். தற்போதைய சபாநாயகர் தனபால் சங்ககிரியில் 2001ஆம் ஆண்டு வெற்றி பெற்று ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ஆனார்.

சங்ககிரி சட்டமன்ற தொகுதியில் அதிகமாக அதிமுக 7 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 5 முறையும், காங்கிரஸ் 2 முறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளது. தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ அதிமுகவில் எஸ் ராஜா. அதிக ஆண்  வாக்காளர்கள் உள்ள சங்ககிரி தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,73,143 ஆகும். லாரி பட்டறை மற்றும் பாடி பில்டிங் தொழில் அதிகளவில் நடைபெறுவதால் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட தொழிற்பேட்டை அமைக்கும் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.

தொழில் பாதிப்பு காரணமாக ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கூலி வேலைக்கு செல்லும் நிலைக்கு சங்ககிரி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். பெண்களுக்கான கல்லூரி இப்பகுதியில் தொடங்கப்பட வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. சங்ககிரி வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. ரயில்வே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்பது கடந்த 40 ஆண்டு காலமாக கோரிக்கையாக உள்ளது. கிராமப்புற சாலைகள் அனைத்தும் சேதம் அடைந்து மிக மோசமான நிலையில் காணப்படுகின்றன.

சங்ககிரி சட்டமன்ற தொகுதியில் உள்ள சரபங்கா நதியின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என்பதும் நீண்டகால கோரிக்கை. பாலம் கட்டப்படாததால் 15 கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டு 15 கிலோமீட்டர் வரை மாற்றுப்பாதையில் செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும் மக்கள் புகார் கூறுகின்றனர். சாலைகள் தொடங்கி அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை என குற்றம் சாட்டும் சங்ககிரி தொகுதி மக்கள், வரும் காலத்திலாவது துயரங்கள் தீரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

Categories

Tech |