தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பகுதியிலுள்ள தூய மைக்கேல் இருதய மேல்நிலை பள்ளி மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த மாணவி மதமாற்றத்தால் தான் தற்கொலை செய்து கொண்டார் என பாஜகவினர் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதனையடுத்து இந்திய பாஜக தலைவர் ஜே.பி நட்டா இதுகுறித்து விசாரணை செய்வதற்கு நான்கு பேர் கொண்ட குழுவை ஏற்பாடு செய்தார். அந்த குழுவில் நடிகையும் பாஜக நிர்வாகியுமான விஜயசாந்தியின் இடம்பெற்றிருந்தார்.
இவர் நேற்று தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை நேரில் சந்தித்து இது தொடர்பாக மனு அளித்தார். இதனைத் தொடர்ந்து அவர் சசிகலாவை நேரில் சந்தித்தார். அவர்கள் இருவருக்குமான இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது எனவும் மற்றபடி வேறு ஒன்றுமில்லை எனவும் சந்திப்பின் பிறகு விஜயசாந்தி கூறினார். ஆனால் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக நடைபெற்ற இவர்களின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.