2017ம் ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக்கோரி சசிகலா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் எனவும் சசிகலா தரப்பில் கோரப்பட்டு இருந்தது. சசிகலாவின் வழக்கை நிராகரிக்க கோரி ஓபிஎஸ் மற்றும் ஈபீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்குகள் சென்னை 4வது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு உரிமை கோர சசிகலாவுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை எனவும், கட்சியின் சின்னமும் தங்களிடம் இருப்பதாகவும் தேர்தல் ஆணையமும் இதை உறுதி செய்துள்ளதாகவும் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வாதிடப்பட்டது. சசிகலா தொடர்ந்த இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்பதால் அபாரதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் விவாதிக்கப்பட்டது. இந்த வழக்கில் வாதம் முடிவதால் வழக்கு விசாரணைக்கு அக்டோபர் 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.