சசிகலா விடுதலையாகப்போகும் நிலையில் உடல்நிலை பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலாவிற்கு சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த வழக்கில் சசிகலாவுடன் சுதாகரன், இளவரசி போன்றோரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் வரும் ஜனவரி 27-ம் தேதியன்று சசிகலாவின் தண்டனை காலம் முடிவடைந்து விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறை நிர்வாகம் அறிவித்திருந்தது. இதற்கிடையில் நேற்று பெங்களூரு சிறையில் இருந்த சசிகலாவிற்கு திடீரென உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு முதலில் சிறை மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் அவருக்கு மூச்சு திணறல் அதிகரித்ததை தொடர்ந்து பெங்களூர் பௌரிங் அரசு மருத்துவமனையில் சிறை கைதிகளுக்குரிய வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதியானது. எனினும் சசிகலாவிற்கு மருத்துவ பரிசோதனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டுவந்தது. அதில் அவருக்கு ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு குறைந்துள்ளது. இதனால்தான் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
அதன் பிறகு மருத்துவர்கள் அவருக்கு ஆக்சிஜன் செலுத்தி சிகிச்சை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளனர். இந்நிலையில் இன்று காலை அவருக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் சசிகலாவின் உறவினர்கள் மிகுந்த வருத்தம் அடைந்தனர். மேலும் அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் சிடி ஸ்கேன் பரிசோதனையும் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இதன்படி சசிகலா ஆம்புலன்ஸ் மூலமாக விக்டோரியா என்ற மருத்துவமனைக்கு சிடி ஸ்கேன் பரிசோதனை செய்வதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
மேலும் வழக்கறிஞர் ராஜ ராஜன் என்பவர் சசிகலாவிற்கு கேரளா அல்லது புதுச்சேரியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று கர்நாடக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார். மேலும் அவரது புகாரில் கூறியிருப்பதாவது, விடுதலையாகப்போகும் சமயத்தில் திடீரென சசிகலாவிற்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டிருப்பது சந்தேகத்தை உண்டாக்குகிறது என்று கூறியுள்ளார்.