சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது எங்களுக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று அதிமுக கட்சியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், ஆத்தூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு எடப்பாடி பழனிசாமி நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு நல்லது செய்யும் ஒரே கட்சி அதிமுக தான். மக்களுக்கு பயன்படும் வகையில் தற்போது நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது என்று பேசினார்.
மேலும் தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் சொத்துவரி, வீட்டுவரி உள்ளிட்ட அனைத்தும் 150 சதவீதம் உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு குறைத்து போதிலும், மாநில அரசு குறைக்க முன்வர வில்லை. சசிகலா சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது அவருடைய தனிப்பட்ட விருப்பம். அவரின் வருகையால் எந்த மாற்றமும் நிகழாது. அவர் ஆன்மிக சுற்றுலா பயணம் மேற்கொண்டு வருகிறார். மேலும் அவர் அதிமுக நிர்வாகிகள் யாரையும் சந்திக்கப் போவதில்லை என்று தெரிவித்தார்.